Site icon Oasis Fertility

கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

IVF with egg donation

Author: Dr. Sai Manasa Darla, Consultant, Fertility Specialist &  Laparoscopic Surgeon

குறைவான கருப்பை இருப்பு (கருப்பையில் உள்ள கருவுறக்கூடிய கருமுட்டைகளின் எண்ணிக்கை) உடைய பெண்களுக்கு அல்லது குறைவான கருமுட்டை தரமுடைய பெண்களுக்கு, கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF ஒரு நிம்மதிப் பெருமூச்சாகும். கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF செயல்முறை தம்பதியினரின் பெற்றோர்த்துவ கனவு நனவாக உதவுகிறது.

கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF என்றால் என்ன?

கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF ஒரு துணை இனப்பெருக்க தொழில்நுட்பம் ஆகும். முகமறியாத கருமுட்டை தானமளிப்பவரிடம் இருந்து பெறப்பட்ட முதிர்வடைந்த கருமுட்டைகளை இது பயன்படுத்துகிறது. பெறப்பட்ட இந்த கருமுட்டைகள் பின்னர் ஆண் துணையின் விந்தணுக்களுடன் கருவுறச் செய்யப்படும். கருவுற்ற பின் அதிலிருந்து உருவாகும் எம்ப்ரியோவானது கருப்பதிக்க பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும்.

கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF யாருக்கு தேவைப்படுகிறது?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF பரிந்துரைக்கப்படுகிறது:

– முதிர்வடையா இறுதி மாதவிடாய்

– முதிர்வடையா கருப்பை செயலிழப்பு

– குறைவான கருப்பை இருப்பு

– மீண்டும் மீண்டும் IVF செயல்முறைகள் தோல்வியடைதல்

– புற்றுநோய் மற்றும் கீமோதெரபி போன்ற மருத்துவ பிரச்சனைகள் மற்றும் சிகிச்சைகள்

– பரம்பரை மற்றும் பிறவி சிக்கல்கள்

– தாயின் வயது மூப்பு


கருமுட்டை தானம் செய்பவருக்கான அடிப்படை தேவைகள் என்ன?

ஒரு பெண் கருமுட்டை தானம் செய்வதற்கான அடிப்படைகள், துணை இனப்பெருக்க தொழில்நுட்பம் (ஒழுங்குமுறை) மசோதா, 2021 இல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கருமுட்டை தானம் செய்வது ஒரு அநாமதேய செயல்முறை என்பதை அறிந்திருப்பது அவசியம்.

– கருமுட்டை தானம் செய்பவர் 23 முதல் 35 வயதுக்குள் இருக்கும் ஆரோக்கியமான பெண்ணாக இருக்க வேண்டும்.

– கருமுட்டை தானம் செய்பவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் இதைச் செய்யலாம். அவரிடமிருந்து ஏழுக்கும் அதிகமான கருமுட்டைகளை பெறக் கூடாது

– ஒரு ART வங்கியானது, பெயர், ஆதார் எண், முகவரி, மற்றும் தேவையான பிற விவரங்கள் உட்பட, கருமுட்டை தானம் செய்பவரின் அனைத்து தேவையான தகவல்களையும் பெறலாம்.

– தானம் செய்பவரின் கேமெட்டை பத்து வருடங்களுக்கு மேல் சேமித்து வைக்கக்கூடாது. அந்தக் காலத்தின் முடிவில், அத்தகைய கேமெட்டுகளை அழித்து விடலாம் அல்லது இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தம்பதியினர் அல்லது தனிப்பட்ட நபரின் ஒப்புதலுடன் ஆராய்ச்சிக்காக தானம் செய்யலாம்.

– தானம் செய்பவரின் மருத்துவ பரிசோதனை: ஹியூமன் இம்யூனோ டெபிசியன்சி வைரஸ் (HIV) வகை 1 மற்றும் 2 இரண்டும், ஹெப்பட்டிட்டிஸ் B வைரஸ் (HBV), ஹெப்பட்டிட்டிஸ் C வைரஸ் (HCV), VDRL மூலம் டிரெபோனிமா பல்லேடியம் (சைபிலிஸ்) போன்ற பரவக்கூடிய நோய்கள் இருக்கிறதா என தானம் செய்பவர் பரிசோதிக்கப்படுவார்.

– தன் கேமெட்டிலிருந்து பிறக்கும் குழந்தை அல்லது குழந்தைகளின் மீதான பெற்றோர்த்துவ உரிமைகள் அனைத்தையும் தானம் செய்பவர் துறக்க வேண்டும்.

கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF செயல்முறை யாது?

கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF ஐ இரண்டாகப் பிரிக்கலாம்:

1. பெறுநர் மதிப்பீடு

கருவுறுதல் நிபுணரால் ஒரு அடிப்படை மதிப்பீடு செய்யப்படும். இந்த செயல்முறையின்போது இதை பாதிக்கக்கூடிய அசாதாரண சூழ்நிலைகளை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் இந்த மதிப்பீட்டில் இருக்கும்.

பரிசோதனைகளாவன:

● கருப்பையில் உள்ள அசாதாரணங்களை கண்டறிய அல்ட்ரா சவுண்ட் சோதனை

● அடிப்படை இரத்தப் பரிசோதனைகள் (ஹார்மோன் விவரங்கள், முழு இரத்த விவரங்கள், முதலியன.)

● பாப் ஸ்மியர்ஸ் மற்றும் மேமோகிராம்ஸ் போன்ற திரையிடல்கள்

2. தானம் செய்பவரை தேர்ந்தெடுத்தல்

கருமுட்டையை பெரும் தம்பதியினரிடம் பகிரப்படும் தானம் செய்பவர்களின் விவரங்களில் இருந்து தானம் செய்பவர் தேர்ந்தெடுக்கப்படுவார். குறிப்பிடப்பட்டுள்ளபடி, தானம் செய்பவர் முகமறியாத நபர் ஆவார். இனம், முடி நிறம், கண் நிறம், போன்ற இயற்பியல் பண்புகளும், படிப்பு மற்றும் தொழில் போன்ற பிற அடிப்படை விவரங்களும் பெறுனரிடம் பகிரப்படும்.

3. தானம் செய்பவரின் மற்றும் பெறுநரின் மாதவிடாய் சுழற்சிகளை ஒத்திசைத்தல்

கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF செயல்முறையில் பெறுநர் மற்றும் கருமுட்டை தானம் செய்பவரின் மாதவிடாய் சுழற்சிகள் ஒத்திசைக்கப்படும். இது வழக்கமாக பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் மூலம் செய்யப்படும். தானம் செய்பவரை தேர்ந்தெடுத்தவுடன், பெற்றுக்கொள்ள போகும் பெண்ணுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு எஸ்ட்ராடியால் மாத்திரைகள் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுடைய மாதவிடாய் சுழற்சிகள் ஒத்திசைக்கப்பட்டு, பெறப்போகும் பெண்ணின் கருப்பையானது எம்ப்ரியோ பரிமாற்றத்துக்கு

அவரது மாதவிடாயின் இரண்டாவது நாளிலிருந்து தயார்படுத்தப்படும். கருப்பை தூண்டலுக்காக தானம் செய்பவருக்கு ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படும்.

4. கருமுட்டை தானம் செய்பவரிடம் இருந்து கருமுட்டைகளை சேகரிக்கும் செயல்முறை

தானம் செய்பவரின் கருமுட்டையை தூண்டுதல்

பல முதிர்வடைந்த கருமுட்டைகளை உருவாக்குவதற்கு கருப்பைகளை தூண்டக்கூடிய ஹார்மோன் மருந்துகள் கருமுட்டை தானம் செய்பவருக்கு கொடுக்கப்படும்.

தானம் செய்பவரிடம் இருந்து கருமுட்டைகளை பெறும் செயல்முறை

கருப்பைத் தூண்டலுக்கு பின், கருமுட்டைகளின் முதிர்வடைதலுக்காக கருப்பை நுண்ணறைகள் தூண்டப்படும். கருப்பைகள் தகுந்த மற்றும் தேவையான நுண்ணறையின் அளவை அடைந்த பின்னரே தூண்டப்படும். 11-12 நாட்கள் எடுத்துக்கொள்ளும் முதிர்வடைதல் செயல்முறைக்கு பின்னர், அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலுடன் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கருமுட்டை சேகரிப்பு செயல்முறை அல்லது கருமுட்டைகளைப் பெறும் செயல்முறை மேற்கொள்ளப்படும்.

5. இன் விட்ரோ ஃபெர்டிலைசேசன்:

கருமுட்டைகளைப் பெற்ற பிறகு அவை எப்படி கருவுறும்?

கருமுட்டை சேகரிக்கும் செயல்முறை மேற்கொள்ளப்படும் நாளன்று பெறுனருடைய துணையின் விந்தணு மாதிரி சேகரிக்கப்படும். பெறப்பட்ட கருமுட்டைகள் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலின் கீழ் விந்தணு மாதிரியுடன் கருவுறச் செய்யப்படும். குறைவான விந்தணு எண்ணிக்கை அல்லது விந்தணுக்களின் குறைவான வேகம் போன்ற சில சூழல்களில், கருவுறுதலுக்கு உதவ ICSI மேற்கொள்ளப்படும். ICSI (இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் விந்தணு ஊசி) என்னும் முறையில் மாதிரியிலிருந்து சிறந்த விந்தணு சேகரிக்கப்பட்டு கருமுட்டைக்குள் உட்செலுத்தப்படும்.

கருவுறுதலுக்கு 3 முதல் 5 நாட்களுக்குப் பின், உருவாகிய எம்ப்ரியோக்கள் கருப்பதித்தல் வாய்ப்புகளையும் வெற்றிகரமான கருத்தரிப்பு வாய்ப்புகளையும் அதிகரிக்க பரிமாற்றத்துக்கு முன் பிளாஸ்டோசிஸ்ட் நிலை வரை வளர்ந்து விடும்.

ஏதேனும் கூடுதல் எம்ப்ரியோக்கள் உருவாகி இருந்தால், இந்த செயல்முறை தோல்வியடையும் பட்சத்தில், அவற்றை பிற்கால பயன்பாட்டுக்காக உறைய வைக்கலாம்.

6. பெறுநரின் எண்டோமெட்ரியத்தை தயார்படுத்தி எம்ப்ரியோ பரிமாற்றம் செய்தல்:

எம்ப்ரியோ கருப்பதித்தலுக்கு உதவ, பெறுநருக்கு லுட்டியல் ஆதரவு மருந்துகள் பரிந்துரைக்கப்படும்

அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலின் உதவியுடன் 1 அல்லது 2 ஆரோக்கியமான எம்ப்ரியோக்கள் பெறுநரின் கருப்பைக்குள் பரிமாற்றப்படும்.

7. கர்ப்ப பரிசோதனை:

இந்த செயல்முறை வெற்றி பெற்றதா இல்லையா என்பதை அறிய, எம்பிரியோ பரிமாற்றத்திற்குப் பின் இரண்டு வார காத்திருப்பு காலம் முடிந்த பிறகு ஒரு இரத்த கர்ப்ப பரிசோதனை செய்யப்படும். இரத்தத்தில் உள்ள HCG அளவுகள், கர்ப்ப முடிவை நிர்ணயிக்க அளவிடப்படுகின்றன.

முடிவுரை:

கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF பல்வேறு காரணங்களினால் தாய்மையை அடைய முடியாமல் இருக்கும் பெண்களுக்கு ஒரு நம்பிக்கையாக உள்ளது. ஆனாலும், கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF இன் வெற்றி விகிதம் பெறுநர் மற்றும் தானம் செய்பவர் இருவரையும் சார்ந்து இருப்பதை அறிந்திருப்பது அவசியம். பெறுநர் காரணிகளாவன, வயது, எண்டோமெட்ரியத்தின் தடிமன், உடல் எடை, கருப்பை பிரச்சனைகள், எம்ப்ரியோவின் தரம், முதலியன. தானம் செய்பவர் காரணிகளில் அடங்குபவை, வயது மற்றும் பெறப்பட்ட முதிர்வடைந்த கருமுட்டைகளின் எண்ணிக்கை ஆகும். கருமுட்டை தானம் மூலம் செய்யப்படும் IVF பற்றி அறிந்து கொள்ள எங்கள் நிபுணத்துவம் வாய்ந்த கருவுறுதல் நிபுணர்களுடன் இன்றே ஆலோசியுங்கள்.

Exit mobile version