Author : Dr Jigna Tamagond, Consultant-Fertility Specialist, Oasis Fertility, Karimnagar
அதிக ஆபத்தான கருத்தரிப்பு – செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை
கர்ப்பமானாலே சிலவித பயமும் விரக்தியும் பெண்களுக்கு ஏற்படும். சில மருத்துவ நிலைமைகளும் வாழ்க்கைமுறை நிலைமைகளும் அதிக ஆபத்தான கருத்தரிப்பை ஏற்படுத்தி, தாய் குழந்தை இருவருக்குமே சிக்கல்களை உண்டாக்கலாம். சிக்கல்களை உண்டாக்கும் சூழ்நிலைகள் எவை என்பதை அறிந்து, பாதுகாப்பான கர்ப்பத்தையும் ஆரோக்கியமான குழந்தையையும் பெறுவதற்கு, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம்.
அதிக ஆபத்தான கருத்தரிப்புக்கான காரணங்கள்:
1. உடல்நலம் சார்ந்தவை
a. சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உங்களுக்கு கருத்தரிப்பதற்கு முன்பு இருந்தாலோ, கர்ப்பகாலத்தின்போது உண்டானாலோ (கர்ப்பகால சர்க்கரை நோய்), சர்க்கரையின் அளவுகள் கட்டுப்பாடற்றதாய் இருந்தால், அது தாய் குழந்தை இருவருக்குமே சிக்கல்களை உண்டாக்கும். நீங்கள் அதிக எடையுடனும் இருந்து உங்களுக்கு கர்ப்பகால சர்க்கரை நோயும் இருந்தால் இதன் ஆபத்து அதிகம்.
b. PCOS
PCOS இருக்கும் பெண்களுக்கு இன்சுலின் தடுப்பு, இதய நோய், வாதம், முதலியன போன்ற பல சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
c. தைராய்டு பிரச்சனை
தைராய்டு பிரச்சனைகள் இருக்கும் பெண்களுக்கு, ப்ரீஎக்லம்ப்சியா (BP உயர்வு), நஞ்சுக்கொடி சீர்குலைவு (ஆரம்ப நிலையிலே கர்ப்பப்பையிலிருந்து நஞ்சுக்கொடி பிரிவது), நுரையீரல் உயர் இரத்த அழுத்தம், முதலியன போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் கருச்சிதைவு, குறைவான பிறப்பு எடை மற்றும் குழந்தை இறந்து பிறப்பதும் நேரிடலாம்.
d. தன்னுடல் தாக்க நோய்
சிஸ்டமிக் லூபஸ் எரிதெமட்டோசஸ் போன்ற தன்னுடல் தாக்க நோய்கள் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தலாம். பாதுகாப்பான கர்ப்பமும் பிரசவமும் பெற பலதரப்பட்ட அணுகுமுறை அவசியமாய் இருக்கிறது.
e. உயர்வான BP
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தினால், வாதம், நஞ்சுக்கொடி சீர்குலைவு முதலியவை ஏற்படலாம்.
f. பருமன்
பெண்களின் பருமனால், பிறவி அசாதாரணங்கள், குறைபிரசவம், பிறந்த குழந்தை இறப்பது, முதலியன போன்றவை ஏற்படலாம்.
2. வாழ்க்கைமுறை சார்ந்தவை
a. புகைப்பிடித்தல்
புகைபிடிக்கும் பெண்களுக்கு பிறவி குறைபாடுகளோடு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்.
b. மது அருந்துதல்
அதிகளவு மது அருந்தும் பெண்களால், குழந்தைக்கு, கருவின் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறு (FASD) ஏற்பட்டு, உடல் ஊனம், நரம்பு மண்டல பாதிப்பு, முதலியன ஏற்படும்.
c. போதை பயன்பாடு
போதை பயன்பாட்டினால், திடீர் குழந்தை மரண நோய்க்குறியும் (SIDS), பிறவி அசாதாரணங்களும் ஏற்படும்.
3. வயது – 35 வயதுக்குப் பின் முதல்முறை கருத்தரித்தல்
தாயின் வயது மூப்பினால், சிசேரியன், கர்ப்பப்பையிலேயே குழந்தை இறப்பது (FDIU), மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாகும்.
4. பன்முகக் கருத்தரிப்புகள்
பன்முகக் கருத்தரிப்பு அடையும் பெண்களுக்கு, கர்ப்பத்தின்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்து அதிகம். இதனால் கருச்சிதைவு, குறைபிரசவம், பிறவி கோளாறுகள், முதலியன ஏற்படலாம்.
கருத்தரிப்புக்கான முன்னெச்சரிக்கைகள்
1. குழந்தையின் வளர்ச்சியை பாதிப்பதால் புகைப்பிடித்தலைத் தவிர்க்கவும்.
2. பச்சை இறைச்சி சாப்பிடுவதால், தொற்று ஏற்பட்டு, குழந்தை இறந்து பிறப்பது மற்றும் பிற சிக்கல்கள் குழந்தைக்கு ஏற்படுவதால் அதைத் தவிர்க்கவும்.
3. அதிகளவு காபி அருந்தினால் கருச்சிதைவு ஏற்படும் என்பதால் அதைத் தவிர்க்கவும்.
4. மன அழுத்தத்தைத் தவிர்த்து, யோகா பயிற்சி மற்றும் இசை கேட்கும் பழக்கத்தைத் துவங்குங்கள்.
5. குழந்தைக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை தவிர்க்கவும்.
கர்ப்பகாலத்தின்போது நீங்கள் என்ன செய்யலாம்?
1. உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு, மூளை ஆகியவற்றிற்கு பயன் தருவதும், ஹார்மோன் கட்டுப்பாட்டுக்கு உதவுவதுமான நல்ல தூக்கத்தைப் பெறுங்கள்.
2. அதிகளவு காய்கறிகள், பழங்களைச் சேர்த்து ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
3. அதிகளவு எடைக் கூடுதல், சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியமான எடையைக் கொண்டிருங்கள்.
4. ஃபோலிக் ஆசிட் போன்ற மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் குழந்தையின் பிறவி கோளாறுகளைத் தவிர்க்கலாம்.
5. வழக்கமான உடல்நல சோதனைகளை தவறவிடக் கூடாது.
6. தாய் குழந்தை இருவருக்கும் உதவியாய் இருக்கும் யோகா அல்லது உடற்பயிற்சியை பயிற்சி செய்யுங்கள்.
அதிக ஆபத்தான கருத்தரிப்பு நிலைமைகளை மருத்துவரின் துணையோடு சமாளிக்கலாம். சர்க்கரை நோய்க்கான திரையிடல், கர்ப்பகாலத்தின் 24 முதல் 28 வாரங்களுக்குள் செய்யப்படவேண்டும். ஆனால் சர்க்கரை நோயின் ஆபத்து உங்களுக்கு அதிகமாய் இருந்தால், அதற்கு முன்பே அதை சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு முறை மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போதும் இரத்த அழுத்தத்தை சரிபார்க்கவேண்டும்.
எல்லா வழிமுறைகளையும் மருந்துகளையும் தவறாமல் பின்பற்றுவது அவசியம். பாதுகாப்பும் ஆரோக்கியமுமான கர்ப்பத்தையும் பிரசவத்தையும் அடைய, ஒவ்வொரு கர்ப்பமான பெண்ணும் நேர்மறையான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையோடிருப்பது முக்கியம்.