Author: Dr. V Ramya, Consultant & Fertility Specialist
தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை பல தம்பதியினர் இலக்காக வைத்துள்ளதால், கருத்தரிப்பை திட்டமிட முக்கியத்துவம் அளிப்பதில்லை. பெண்களில், முக்கியமாக தொழில் முனைவுடைய பெண்களின் மத்தியில், கருமுட்டை உறைய வைத்தல் பிரபலமடைந்துள்ளது. ஆனாலும், கருமுட்டை உறைய வைத்தலை பற்றிய கட்டுக்கதைகளும் சந்தேகங்களும், பலர் இதைப் பற்றி யோசிக்க விடாமல் தடுக்கின்றன. கவலைப்படாதீர்கள், அதை பற்றின விவரங்களை நாங்கள் கூறுகிறோம்.
முதலாவதாக, கருமுட்டை உறைய வைத்தல் என்றால் என்ன?
மருத்துவ முறையில், இது கருப்பை கிரையோப்ரிசர்வேஷன் எனப்படும். இது பெண்ணின் இனப்பெருக்க ஆற்றலை பாதுகாக்க பயன்படும் செயல்முறையாகும். பல முதிர்வடைந்த கருமுட்டைகளைப் பெற, ஹார்மோன் ஊசிகளை பயன்படுத்தி கருப்பைகள் தூண்டப்படும். இந்த முதிர்வடைந்த கருமுட்டைகள் குறைவான வெப்ப நிலையில் பிற்கால பயன்பாட்டுக்காக உறைய வைக்கப்படும்.
கருமுட்டை உறைய வைத்தலைப் பற்றி யோசிக்க வைக்கும் காரணங்கள்:
ஒருவர் கருமுட்டை உறைய வைத்தலை பற்றி யோசிக்க பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில:
– தொழில் மற்றும் கல்வித் திட்டங்கள்
– லிம்ஃபோமா, மார்பு, மற்றும் பிற புற்றுநோய்களுக்கான புற்றுநோய் சிகிச்சை
– கணவரை இழந்திருப்பது அல்லது கணவரின் கருவுறுதல் சிக்கல்கள் போன்ற தனிப்பட்ட சூழ்நிலைகள்
– குடும்ப வரலாற்றில் இருக்கும் மரபியல் பிரச்சனைகள் கருவுறுதலை பாதித்திருப்பது.
– தொற்றுகள், உறுப்பு செயலிழப்பு, மற்றும் பிற உடல் நல பிரச்சனைகள்
கருமுட்டைகளை உறைய வைப்பதற்கான சரியான வயது
வயது ஆக ஆக கருமுட்டையின் தரமும் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே போகும் என்பதால், பெண்ணின் கருத்தரிப்பு வாய்ப்புகளும் குறையும் என்பதை நன்கு அறிந்திருக்கிறோம். மேலும் ஒரு பெண்ணின் கருத்தரிப்பு 25-30 வயதில் உச்சத்தில் இருக்கும்.
35 – 40 வயதிற்குப் பின், அது விரைவாய் சரிய தொடங்கும். எனவே, சிறந்த விளைவுகளுக்கு, உங்கள் 20களின் முடிவிலோ 30களின் துவக்கத்திலோ உங்கள் கருமுட்டைகளை உறைய வைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
40 வயதிலும் உங்கள் கருமுட்டைகளை உறைய வைக்கலாம். ஆனால் 35 வயதிற்குப் பின், கருவுறுதல் வாய்ப்புகள் சரிய தொடங்கும். கருமுட்டை இருப்பில் சரிவு இருப்பதால், பெறக்கூடிய கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
40 வயதில் தங்கள் தாய்மையை தள்ளிப் போட விரும்பும் பெண்கள், சிறந்த விளைவுகளுக்கு கருமுட்டை வழங்குனர்களிடமிருந்து கருமுட்டைகளை பெற பரிந்துரைக்கப்படுகிறது.
உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளின் ஆயுள்:
உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகள், வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கப்படலாம். ஆனாலும், பலர் அவற்றை, உறைய வைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தி விடுவர். ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகள், 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும்போது, அவற்றின் தரம் குறைய தொடங்கலாம்.
உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளை பயன்படுத்தாவிட்டால், அவற்றை நிராகரித்து விடலாம் அல்லது மற்றவர்களுக்கு வழங்கலாம்.
முடிவுரை:
பல்வேறு காரணங்களால் தங்கள் கருத்தரிப்பை தள்ளிப்போட திட்டமிடும் பெண்களுக்கு, கருமுட்டை உறைய வைத்தல் நம்பிக்கை அளிக்கிறது. மேலும், தங்கள் கருமுட்டைகளை உறைய வைக்க விரும்பும் பெண்கள், அதை கூடிய விரைவில் செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பிட்ட எண்ணிக்கை கருமுட்டைகள் பாதுகாக்கப்பட வேண்டுவதில்லை. பயன்படுத்தும் போது அதிகமான வெற்றி விகிதங்களை பெற, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கருமுட்டைகளை உறைய வைப்பது நல்லது. ஆனாலும், பெறப்படும் கருமுட்டைகளின் எண்ணிக்கை, பெண்ணின் கருப்பை இருப்பு, வயது, மற்றும் பிற மருத்துவ சூழ்நிலைகளை சார்ந்து இருக்கும்.