Blog
Enquire Now
Uncategorized

சீரற்ற மாதவிடாய் மற்றும் கருத்தரிப்பைப் பற்றி நீங்கள் அறிய வேண்டியது

சீரற்ற மாதவிடாய் மற்றும் கருத்தரிப்பைப் பற்றி நீங்கள் அறிய வேண்டியது

Author: Dr. Sai Manasa Darla, Consultant, Fertility Specialist & Laparoscopic Surgeon

கருவுறுதல் ஒரு உணர்ச்சிகரமான பயணமாகும். நீங்கள் கருத்தரிப்பதில் சிரமம் காணும்போது அது மிகவும் உணர்ச்சிகரமாய் இருக்கும்.

ஒரு பெண்ணின் மாதவிடாயை கண்காணிப்பதே இந்த பயணத்தின் முதல் படியாகும். கருவுறுதலை திட்டமிட, ஒருவரது மாதவிடாய் சுழற்சி, கருவுறக்கூடிய காலம், அண்டவிடுப்பு ஆகியவற்றின் காலவரையை அறிவது அவசியமாய் இருக்கிறது. சீரற்ற மாதவிடாய் சுழற்சி, கருத்தரிப்புக்கு தடையாய் இருக்கலாம்.

சீரற்ற மாதவிடாய் என்றால் என்ன?

இயல்பாகவே, ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் கால அளவு மாறுபடலாம். ஒரு பெண்ணின் ‘இயல்பான’ மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாட்களுக்குள் இருக்கும். இதில் சுழற்சிக்கு சுழற்சி 2-3 நாட்கள் வேறுபடலாம்.

பின்வரும் சூழல்களில் மாதவிடாய் சீரற்றதாய் கருதப்படுகிறது:

1.சுழற்சி, ‘இயல்பான’ வரம்புக்கு கீழ் அல்லது மேல் ஏற்பட்டால்.

2.8 நாட்களுக்கும் மேல் மாதவிடாய் தள்ளிப்போனால் (சில சமயங்களில் கருத்தரித்திருக்கலாம்)

3.பாலிமெனோரியா: அடிக்கடி அல்லது சீக்கிரமே ஏற்படும் மாதவிடாய் என்றும் சொல்லப்படும். இது 21 நாட்களுக்கு முன்னரே மாதவிடாய் சுழற்சி ஏற்படும் மாதவிடாய் கோளாறு.

4.ஒலிகோமெனோரியா: எப்போதாவது மாதவிடாய் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை இது. இதில் மாதவிடாய் சுழற்சியின் நீளம் 35 நாட்களுக்கு மேல் இருக்கும்.

சீரற்ற மாதவிடாய்க்கான காரணங்கள்

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு பல காரணிகள் உண்டு:

1.அண்டவிடுப்பு பிரச்சனைகள்: கருத்தரிப்புக்கான வாய்ப்பு, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் முதிர்வடைந்த கருமுட்டையின் வெளியீடு அல்லது அண்டவிடுப்பைப் பொருத்தது. சீரற்ற அண்டவிடுப்பு அல்லது அண்டவிடுப்பின்மை, சீரற்ற மாதவிடாயை விளைவிக்கும்.

2.பாலிசிஸ்டிக் கருப்பை நோய்குறி (PCOS): இது ஒரு ஹார்மோன் கோளாறாகும். இதில் அதிகளவு ஆண் பாலின ஹார்மோன்களை (ஆண்ட்ரோஜன்கள்) உடல் உருவாக்கும். இதனால் சீரற்ற அண்டவிடுப்பு, கருப்பை கட்டிகள் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படும்.

3.தைராய்டு நோய்: செயலற்ற அல்லது அதிகமாய் செயல்படும் தைராய்டு, மாதவிடாய் சுழற்சிகளின் ஒழுங்குமுறையை பாதிக்கும்.

4.எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு

5.மன அழுத்தம் மற்றும் விரக்தி

6.ஹார்மோன் சமநிலையின்மை

7.சீரற்ற கர்ப்பத்தடை மாத்திரை பயன்பாடுகள்

8.ஃபைப்ராய்டுகள், எண்டோமெட்ரியாசிஸ் மற்றும் நீரிழிவு நோய்

9.பால்வினை தொற்றுகள்

சீரற்ற மாதவிடாயுடன் கருத்தரிப்பை திட்டமிடுவது எப்படி?

சீரற்ற மாதவிடாய் உடைய பெண், கருத்தரிக்க முடியாதது போல் இருக்கலாம். ஆனால், பயப்படத் தேவையில்லை. சீரற்ற மாதவிடாயைக் கவனித்து சிகிச்சையளித்தால் சீரற்ற மாதவிடாய் உடைய பெண்ணும் கருத்தரிப்பது சாத்தியம்.

அண்டவிடுப்பை கண்காணித்து சரியான நேரத்தில் உறவு வைத்துக்கொள்வது, கருத்தரிப்புக்கான வாய்ப்பை அதிவேகமாக

அதிகரிக்கும். அண்டவிடுப்பை கண்டறிய அண்டவிடுப்பு அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.

அண்டவிடுப்பு அறிகுறிகள்:

1.அதிகமான கர்ப்பப்பை வாய்ச்சளி – இழுக்கக்கூடிய, தெளிவான மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு போன்ற வெளியேற்றம்

2.உங்கள் அடிப்படை உடல் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும்

அண்டவிடுப்பை கணிக்கும் கருவிகள், அல்ட்ராசவுண்ட் மற்றும் இரத்த பரிசோதனைகள், அண்டவிடுப்பைக் கண்டறிய பயன்படுத்தப்படலாம். சீரற்ற அண்டவிடுப்பு அல்லது அண்டவிடுப்பின்மையின் சூழல்களில், அடிப்படை காரணத்தைப் பொருத்து மருத்துவர்கள் சிகிச்சை முறைகளை பரிந்துரைக்கலாம். அடிப்படை பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உங்கள் கருத்தரிப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

சில வாழ்க்கைமுறை மாற்றங்கள், மாதவிடாய் மற்றும் அண்டவிடுப்பை நன்கு ஒழுங்குபடுத்தும்.

மருத்துவரை அணுக வேண்டிய சூழல்கள்:

1.மூன்று மாதங்களுக்கும் மேல் மாதவிடாய் ஏற்படாவிட்டால்

2.ஒரு வாரத்துக்கும் மேல் மாதவிடாய் நீடிப்பது

3.அதிகமான இரத்தக்கசிவு

4.வலிமிக்க மாதவிடாய்

5.நீங்கள் 35 வயதுக்குக் கீழ் இருந்து, ஒரு வருடமாகியும் கருத்தரிக்க முடியாவிட்டால்

முடிவுரை:

மாதவிடாய் பயணத்தில் சீரற்ற மாதவிடாய் கவலையை ஏற்படுத்தினாலும், மனம் சோர்ந்துபோக வேண்டாம். சரியான

நேரத்தில் நடவடிக்கை எடுத்து, அடிப்படை காரணத்தை கண்டறிந்தால் ஆரோக்கியமான கர்ப்பத்துக்கான வாய்ப்பு உண்டு.

சீரற்ற மாதவிடாய், அண்டவிடுப்பு பிரச்சனைகள், மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையால் மாதவிடாய் சுழற்சி சீரற்றதாய் இருந்தால், கருத்தரிப்பில் சிரமம் ஏற்படும்.

அசாதாரண மாதவிடாய் சுழற்சிக்கு காரணமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலமும், அண்டவிடுப்பை ஒழுங்குபடுத்தி கண்டறிவதன் மூலமும் உங்கள் கருவுறுதலை மேம்படுத்த, ஒரு கருவுறுதல் நிபுணரை ஆலோசிப்பது உதவியாயிருக்கும்.

Write a Comment