பெண் கருவுறுதலில் ஊட்டச்சத்தின் தாக்கம்
Author: Dr. Aparna Vishwakiran, Senior Consultant & Fertility Specialist
நம் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவுகளையும் அதில் உள்ள ஊட்டச்சத்துகளையும் பொருத்தே இருக்கிறது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், குறிப்பாய் கருவுறுதலையும் பாதிக்கும் மோசமான உணவுமுறை பழக்கங்களின் தாக்கம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களும் சமநிலையற்ற உணவுமுறைகளும் ஆண் பெண் இருபாலரின் இனப்பெருக்க செயல்பாடுகளையும் பாதிக்கும்.
மலட்டுத்தன்மையை கையாள்வதில் ஊட்டச்சத்து உணவுகளின் பங்களிப்பு பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. மருத்துவ சிகிச்சையோடு கூட, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் போதுமான ஊட்டச்சத்து ஆதரவு போன்ற முழுமையான அணுகுமுறையைக் கையாள்வது, உருவாகும் கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்களின் மீது பயனுள்ள தாக்கங்களை ஏற்படுத்தும். இது ஆண் பெண் இருபாலரிலும் மலட்டுத்தன்மையை மேம்படுத்துவதிலும் அதற்கு சிகிச்சையளிப்பதிலும் உதவுகிறது.
பெண் மலட்டுத்தன்மை, உலகளவில் இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களில் காணப்படும் ஒரு பரவலான மருத்துவ மற்றும் சமூகப் பிரச்சனை ஆகும்.
இது அண்ட விடுப்பு கோளாறுகள், கருப்பை இருப்பு மற்றும் கருமுட்டை தரத்தில் ஏற்படும் சரிவு, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் சமநிலையின்மை, இனப்பெருக்க அமைப்பின் பிரச்சனைகள் மற்றும் பிற அடிப்படை நாள்பட்ட நோய்கள் போன்ற பல்வேறு நோய்க்குறியியல் மாற்றங்களால் ஏற்படுகிறது.
அண்டவிடுப்பு கோளாறுகள் மற்றும் கருமுட்டையின் தரம்: பெண் கருவுறுதலின் முக்கியமான உயிர் குறிப்பான்களில் ஒன்று கருமுட்டையின் தரம் ஆகும். ஒரு கருமுட்டை கருவுறும் வாய்ப்பு அதன் தரத்தை பொருத்தே இருக்கும். ஒரு பெண்ணின் கருத்தரிப்பு திறன் மற்றும் பிற்கால கருவுறுதல் ஆகியவை, அவரது கருப்பையில் உள்ள கருமுட்டைகளின் (கருப்பை இருப்பு) எண்ணிக்கை மற்றும் தரத்தைப் பொறுத்ததாகும்.
சீரான மற்றும் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியில் கருமுட்டை வெளியிடப்படுவது அண்டவிடுப்பு ஆகும்.
கருமுட்டையின் தரத்திலோ எண்ணிக்கையிலோ ஏற்படும் சரிவு அல்லது அண்டவிடுப்பு செயல்பாட்டில் உள்ள பிரச்சனைகள், அண்டவிடுப்பு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். கருவுறுதல் மற்றும் கரு பதித்தலுக்கு பின்பு, கருமுட்டை முதிர்வடைதலையும் எம்ப்ரியோக்களின் தரத்தையும் ஊட்டச்சத்து காரணிகள் பாதிக்கும்.
PCOS மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை : இது கருப்பைகளில் நீர்க்கட்டிகள் உருவாகுதல், ஹார்மோன் சமநிலையின்மை, எடை அதிகரிப்பு, அலற்சி மற்றும் சீரற்ற மாதவிடாய் சுழற்சிகள் ஆகிய பிரச்சனைகளையுடைய ஒரு நாளமில்லா கோளாறாகும். இது பெண்களின் மலட்டுத்தன்மைக்கான முக்கிய காரணமாகும்.
முறையான மற்றும் சமநிலையான உணவுமுறை PCOS ஐ எளிதாய் கையாள உதவுகிறது.
அசாதாரண உடல் எடை, ஊட்டச்சத்து கோளாறுகள், புகைபிடித்தல், உடல் பருமன், மது அருந்துதல் முதலியவை போன்ற வாழ்க்கைமுறை தொடர்பான காரணிகளும், பெண்களில் கருவுறுதல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
கருவுறுதலை மேம்படுத்துவதற்கான உணவுகள்:
1.முழு தானியங்கள், போதிய ஊட்டச்சத்தை அளித்து இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் உங்களை நீண்ட நேரம் நிறைவாய் வைத்திருக்கும். இதற்கு சில உதாரணங்கள் முழு கோதுமை, பழுப்பு அரிசி, பார்லி, சோளம், முதலியன.
2.பருப்பு வகைகளையும் முக்கியமாக தாவரப் புரதங்களையும் உட்கொள்ளுவது அண்டவிடுப்பு மலட்டுத்தன்மை ஆபத்தைக் குறைக்கும். மேலும், பருப்பு வகைகள் ஃபோலிக் அமிலத்தின் நல்ல ஆதாரமாகும். இது ஆரோக்கியமான எம்பிரியோ வளர்ச்சிக்கு உதவுகிறது. புரதங்களை உட்கொள்ளுதல், டெஸ்டோஸ்ட்ரோன் அளவுகளைக் குறைப்பதிலும் PCOS பாதித்த பெண்களில் ஹார்மோன் அளவுகளை பராமரிப்பதிலும் நேர்மறையான பங்கு வகிக்கிறது.
3.ஜிங்க், இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் செலெனியம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களின் ஆதாரங்களைச் சேர்த்துக்கொள்வது, நுண்ணறை ஆரோக்கியத்தையும் கருமுட்டையின் தரத்தையும் பராமரிக்க உதவுகிறது
4.ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளையோ ஃபோலிக் அமில மாத்திரைகளையோ எடுத்துக்கொள்ளவும். மேம்பட்ட எம்பிரியோ தரம், பிறப்பு கோளாறுகளை தடுத்தல், மற்றும் அண்டவிடுப்பு மலட்டுத்தன்மையின் ஆபத்தை குறைத்தல் ஆகியவற்றோடு ஃபோலிக் அமிலம் தொடர்புடையது.
5.ஆளி விதைகள், பூசணி விதைகள், எள்ளு மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகளைச் சேர்த்துக்கொள்ளுவதன் மூலம், PCOS தொடர்பான மலட்டுத்தன்மையை கையாளலாம். இந்த விதைகளில் உள்ள ஃபைட்டோஈஸ்ட்ரோஜன்கள் ஹார்மோன் அளவுகளையும் சீரற்ற மாதவிடாய் சுழற்சியையும் ஒழுங்குபடுத்த உதவுகிறது.
6.வைட்டமின் C நிறைந்த பழங்களும், ராஸ்ப்பெரி, ஸ்ட்ராபெரி மற்றும் ப்ளூபெர்ரிக்கள் போன்ற பெர்ரி பழங்களும் ஆக்சிஜனேற்றம் நிறைந்த உணவுகள் ஆகும். இவற்றின் அலற்சி எதிர்ப்பு பண்புகள் PCOS தொடர்பான மலட்டுத்தன்மைக்கு உதவுகிறது.
7.ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் கருவுறுதல் பாதுகாப்பிலும், தரமான கருமுட்டைகளை உருவாக்குவதிலும் உதவுகிறது. மீன், முட்டைகள், உலர் பழங்கள், தாவர எண்ணெய்கள் மற்றும் கடலைகள், ஒமெகா 3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரங்களாகும்.
8.பதப்படுத்தப்பட்ட உணவு, இனிப்பு பானங்கள், மதுபானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விலக்கவும். மேலும், அதிகமாக கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை சேர்த்துக்கொள்வது, அண்டவிடுப்பில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இறுதியாக, அதிகமாக உட்கொள்ளவோ கண்டிப்பான உணவுமுறையை பின்பற்றவோ கூடாது. எதையும் அளவாக எடுத்துக்கொள்வதே முக்கியம். புரதங்கள், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், ஆக்சிஜனேற்றங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த சமநிலையான உணவுமுறையை கையாள்வது பெண் இனப்பெருக்க அமைப்பின் சரியான செயல்பாட்டுக்கும், மலட்டுத்தன்மை ஆபத்தை குறைப்பதற்கும் மிகவும் பயனுள்ளது.