Blog
Enquire Now
Uncategorized

வாழ்க்கைமுறையும் கருவுறுதலும்

வாழ்க்கைமுறையும் கருவுறுதலும்

Author : Dr Akhila Ayyagari, Consultant & Fertility Specialist, Oasis Fertility, Banjara Hills

நம்முடைய வேகமான வாழ்க்கை, நாம் உண்ணும் உணவிலும், நம்முடைய பழக்கவழக்கங்களிலும், தூங்கும் முறையிலும், வேலை செய்யும் முறையிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. பீட்சா, ஊக்க பானங்கள், கேக்குகள், பொறித்த உணவுகள் மேலுள்ள ஆசை, இரவுநேரப் பணிகள், அதிகமான அழகுசாதனப் பொருட்களின் பயன்பாடு, தாமதமான இரவு விருந்துகள், உட்கார்ந்துகொண்டே இருக்கும் வாழ்க்கைமுறை, மற்றும் தூக்கமில்லாத இரவுகள் ஆகியன இந்த தலைமுறையினருடைய வாழ்க்கையின் முக்கிய பங்காகிவிட்டது. ஆனால் இந்த சாதாரண தினசரி நடவடிக்கைகள் ஆண் பெண் இருபாலினருடைய கருவுறும் ஆற்றலையும் பெரிய அளவில் பாதிக்கிறது. இது அதிர்ச்சியளிப்பதாய் இருந்தாலும், நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

வாழ்க்கைமுறை எப்படி கருவுறுதலை பாதிக்கிறது?

கருவுறுதலை பாதிக்கும் முக்கிய வாழ்க்கைமுறை காரணிகள் எவையெனில்:

· வயது மூப்பு

· ஜங்க் உணவுகளை உண்பது

· குறைந்த அல்லது அதிக எடையில் இருப்பது

· தூக்கம் (மிகக் குறைவாய் அல்லது மிக அதிகமாய்)

· காஃபின்

· புகைபிடித்தல்

· மது அருந்துதல்

· அழுத்தம்

· தொழில் வெளிப்பாடு

· சட்டவிரோத போதை பொருட்கள்

· பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

1. வயது மூப்பு

ஒருவரின் கருவுறுதலில் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி ஆசைகளினாலும், தொழில் கனவுகளினாலும் பல தம்பதியினர் பெற்றோர்த்துவத்தை தள்ளிப்போடுகிறார்கள். ஆனால், கருவுறும் ஆற்றல் குறிப்பிட்ட வயது வரை உச்சத்தை எட்டி, பின்பு சரியத் தொடங்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. 35 வயதுக்குப் பின் விந்தணு எண்ணிக்கை, இயக்கம் மற்றும் விந்து அளவு ஆண்களில் குறைந்து, மிகவும் அசாதாரண உருவவியல் ஏற்படலாம். மேலும் 40 வயதுக்குப் பின், விந்தணுவிலுள்ள DNA பாதிப்பின் அளவு பெரிதளவில் அதிகரிக்கும்.

பெண்களில், 30 வயதுக்குப் பின் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைந்துவிடும். வயது செல்ல செல்ல பெண்களின் கருமுட்டைகளில் குரோமோசோமல் அசாதாரணங்கள் ஏற்பட்டு, இயற்கையான கருச்சிதைவுகள், மற்ற கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், மற்றும்

குழந்தையில் மரபணு கோளாறு ஆகியவை ஏற்படலாம். 30 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு 71% க்கும் மேல் இருக்கும், 36 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு அது 41% ஆக இருக்கலாம். குழந்தைப் பெற்றுக்கொள்வதை தம்பதியினர் தள்ளிப்போட விரும்பினால், அவர்கள் தங்கள் கருமுட்டைகள் அல்லது விந்தணு, அல்லது எம்ப்ரியோக்களைப் பாதுகாக்க, கருவுறுதல் பாதுகாப்பு முறைகளை கையாளலாம். இதன் மூலம் தங்கள் கருவுறுதலைப் பாதுகாத்து பிற்காலத்தில் கருத்தரிக்கலாம்.

2. ஜங்க் உணவுகளை உண்பது

ஜங்க் உணவுகளை உண்பது கருவுறும் காலத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. பெண்களில், ஜங்க் உணவுகளில் உள்ள கொழுப்பு, அவர்கள் இனப்பெருக்க ஹார்மோன்களின் நிலைகளை மாற்றி, மாதவிடாய் சுழற்சியை இடையூறு செய்யலாம். ஆய்வின்படி, முழு தானியங்கள் நிறைந்த உணவு, மீன் மற்றும் காய்கறிகள் கருவுறுதலை மேம்படுத்தும்.

3. குறைந்த அல்லது அதிக எடையில் இருப்பது

BMI < 18.5 – குறைந்த எடை

BMI > 25 – அதிக எடை

BMI > 30 – பருமன்

குறைந்த எடையில் இருந்தால், கருப்பை செயலிழப்பு மற்றும் மலட்டுத்தன்மை உண்டாகும்; இத்தகைய பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் அதிகம். ஆண்களில், குறைந்த எடையில் இருப்பவர்களுக்கு குறைவான விந்தணு செரிவு ஏற்படலாம்.

பருமனான பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. அவர்களுக்கு மலட்டுத்தன்மை, கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளது. பருமனான ஆண்களுக்கு, சாதாரண எடையில் உள்ள ஆண்களைவிட, குறைவான விந்து அளவு ஏற்படும் வாய்ப்பு 3 மடங்கு அதிகம். பருமன் விறைப்பு குறைபாட்டையும் ஏற்படுத்தும். பருமன், IVF சிகிச்சையின் விளைவையும் குறைப்பதாக ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாயிருக்க, ஆரோக்கியமான எடையை பராமரிப்பது அவசியம்.

4. தூக்கம்

மிக அதிகமான அல்லது மிகக் குறைவான தூக்கம், ஆண்கள் பெண்கள் இருபாலரிலும் கருவுறுதலை பாதிக்கிறது. தூக்கமின்மை, மலட்டுத்தன்மையை உண்டாக்கக்கூடிய ஹார்மோன் சமநிலையின்மையை விளைவிக்கும். மேம்பட்ட கருவுறும் விளைவுகளைப் பெற தினசரி 7-8 மணிநேர தூக்கம் அவசியம்.

5. காஃபின்

அதிகப்படியான காஃபின் பெண்களின் கருவுறுதலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் (கருச்சிதைவு, கரு இறப்பு, குழந்தை இறந்து பிறப்பது). ஒரு நாளுக்கு 100 மிகி காஃபினுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

6. புகைபிடித்தல்

சிகரெட் புகையில் 4000க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளன. புகைபிடித்தல், விந்தணு எண்ணிக்கை மற்றும் உருவவியலை பாதித்து, விந்தணு DNAவிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிக்கும் பெண்களுக்கு, குறைவான கருப்பை இருப்பும், மாறுபட்ட கருப்பை மற்றும் குழாய் செயல்பாடும், ஹார்மோன் நிலைகளில் இடையூறும் ஏற்படுவதாக ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

7. மது அருந்துதல்

ஆண்கள் மது அருந்துவதால், விதைப்பைச் சிதைவு, குறைவான விந்தணு எண்ணிக்கை, மற்றும் குறைந்த பாலியல் உணர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. மது அருந்தும் பெண்களுக்கு கருத்தரிக்கும் விகிதங்கள் குறைவாயும், இயற்கையான கருச்சிதைவு மற்றும் கரு இறப்புக்கான வாய்ப்புகள் அதிகமாயும் இருக்கிறது. மலட்டுத்தன்மைக்கான வாய்ப்பு, மதுவால் பாதிக்கப்படாத பெண்களை விட பாதிக்கப்பட்ட பெண்களில் அதிகம் என ஆய்வுகள் காண்பித்து, உட்கொள்ளும் மதுவின் அளவும் கவனிக்கப்படவேண்டியது என பரிந்துரைக்கின்றன.

8. அழுத்தம்

உடல் ரீதியானதோ, சமூக ரீதியானதோ, மன ரீதியானதோ எதுவானாலும், அழுத்தம் என்பது எந்த ஒரு சமூகத்திற்கும் முக்கிய பகுதியாய் இருக்கிறது. மலட்டுத்தன்மை தொடர்பான சமூக அழுத்தங்கள், சோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சைகள், தோல்விகள், நிறைவேறாத ஆசைகள் மற்றும் செலவுகளினால் மலட்டுத்தன்மையே மன அழுத்தம் தர கூடியதாகும்.

அழுத்தம் மற்றும் சோர்வு, டெஸ்டோஸ்டிரோனைக் குறைத்து,கோனாடல் செயல்பாட்டை இடையூறு செய்து, இறுதியில் விந்தணு அளவுருக்களை குறைக்கிறது. வாரத்திற்கு 32 மணி நேரத்திற்கு அதிகமாய் வேலை செய்யும் பெண்கள் கருத்தரிக்க தாமதமடைகின்றனர்.

9. தொழில் வெளிப்பாடு

i. காற்று மாசுபடுத்திகள்

கார்பன் மோனாக்சைட், தொழில்துறை உமிழ்வுகள், மற்றும் சல்ஃபர் டைஆக்சைடுகள் போன்ற காற்று மாசுபடுத்திகள், ஆண்களின் கருவுறுதலை பாதித்து,

குறைப்பிரசவத்தையும், குழந்தை இறந்து பிறப்பதையும், கரு இழப்பையும் ஏற்படுத்துகிறது.

ii. கன உலோகங்கள்

· பெயிண்டுகள், செராமிக்குகள் முதலியவற்றில் இருக்கும் ஈயம், மாதவிடாய் சுழற்சியை பாதித்து, கருச்சிதைவு, கருக்கலைப்பு முதலியவற்றை ஏற்படுத்தலாம்.

· தொழில்துறை உமிழ்வுகள், தெர்மோமீட்டர்கள் முதலியவற்றில் இருக்கும் மெர்குரி, விந்தணு உருவாக்கத்தை பாதிக்கலாம்.

iii. லூப்ரிகண்டுகள்

KY ஜெல்லி போன்ற எல்லா லூப்ரிகண்டுகளும் விந்தணு சேதத்தை உண்டாக்கும்.

iv. என்டோக்ரைனுக்கு இடையூறு விளைவிக்கும் இரசாயனங்கள் (EDC)

EDC என்பது இயற்கை ஹார்மோன்களை பின்பற்றும் இரசாயனங்கள். இவை உடலின் ஹார்மோன்கள் செயல்பாட்டில் எதிர்மறை விளைவை உண்டாக்கும். உணவை சேமிக்கும் ப்ளாஸ்டிக்குகள், குழந்தைகளின் பொம்மைகள், சோப்புகள், லூப்ரிகேட்டிங் எண்ணெய்கள், ஷாம்பூக்கள், முதலிய வீட்டு உபயோக பொருட்களில் EDCக்கள் இருக்கின்றன.

v. கதிர்வீச்சு

காமா மற்றும் எக்ஸ்-ரேக்களும் கூட கருவுறுதலில் அழிவுகரமான பாதிப்பை உண்டாக்குவதாக ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. ஆண்களின் கருவுறுதலில் கைபேசிகள் எதிர்மறையான விளைவை உண்டாக்கும். தங்கள் இடுப்பினருகே கைபேசிகளை வைத்துக்கொள்ளும் ஆண்களுக்கு, அதை மற்ற இடங்களில் வைத்துக்கொள்பவர்களை விட, குறைந்த விந்தணு எண்ணிக்கை இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

vi. ஆடை மற்றும் சூடான குளியல்கள்

இறுக்கமான ஆடைகள் விதைப்பை வெப்பநிலையை அதிகரித்து, விந்து தரத்தை பாதிக்கிறது. சூடான குளியல்கள் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது.

10.சட்டவிரோதமான போதைகள்

மாரிஜுவானா, காக்கைன், முதலிய போதைகள் விந்தணு உற்பத்தியையும், விந்தணு இயக்கத்தையும் குறைத்து, குறைவான பாலியல் தூண்டல்கள், விறைப்பு குறைபாடு முதலியவற்றையும் உண்டாக்குகிறது.

11.பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

கால்கிசைன், சைக்லோபாஸ்பமைட், ஆன்டிசைகோடிக்ஸ், H2 ப்ளாக்கர்கள் ஆகியவை இனப்பெருக்க செயல்பாட்டில் மீள முடியாத விளைவை உண்டாக்கி, புரோலாக்டின் உயர்வை ஏற்படுத்தி பாலியல் செயலிழப்பையும் ஏற்படுத்தும்.எந்த மருந்துகள் கருவுறுதல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்து, அந்த பாதிப்புகள் நிரந்தரமானவையா என அறிந்துகொள்வது அவசியம்.

ஆரோக்கியமான உணவுமுறைக்கான குறிப்புகள்:

கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், ஃபோலேட், லைகோபீன் நிறைந்த உணவுகளையும், பழம் மற்றும் காய்கறிகளையும் உண்பது விந்தணு எண்ணிக்கை மேம்படுவதோடு தொடர்புடையது. ஆண் பெண் இருபாலரும், குறைவான புரதம் மற்றும் கொழுப்பை உட்கொள்ளுவது கருவுறுதலுக்கு மிகவும் பயனுள்ளது.

கருவுறுதல் உணவுமுறை என்ன?

அதிகமான ஒற்றை நிறைவுறா மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளுக்கிடையேயான விகிதம், விலங்கு புரதத்தை விட காய்கறிகளில் உள்ள புரதம், குறைந்த கொழுப்பு பால்பொருட்களைவிட அதிக கொழுப்புடையவை, குறைவான கிளைசெமிக் சுமை, மற்றும் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் மல்டிவைட்டமின்கள் ஆகியவை கருவுறுதல் உணவுமுறையில் இருக்க வேண்டும்.

இந்த கருவுறுதல் உணவுமுறையைப் பின்பற்றும் தம்பதியரில் மலட்டுத்தன்மை விகிதங்கள் குறைவு என ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆண்டியாக்சிடண்டுகளின் பங்கு

விந்து வெளியேற்றத்தில் உள்ள அதிகப்படியான ROS ஐ (எதிர்வினை ஆக்சிஜன் இனங்கள்) நீக்க ஆண்டியாக்சிடண்டுகள் உதவுகிறது. மேலும், ROSஐ ஆண்களின் செல்களில் குறைந்த தீங்கு விளைவிக்கும் கலவைகளாய் மாற்றவும் இவை உதவுகிறது. மல்டிவைட்டமின்களை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு கருப்பை மலட்டுத்தன்மைக்கான வாய்ப்பு குறைவு. வைட்டமின் C, E, ஆல்பமின், செருலோப்ளாஸ்மின், ஃபெரிட்டின், முதலியன ஆண்டியாக்சிடண்டுகளில் அடங்கும்.

அழுக்கு டஜன்: (அதிகமான பூச்சிக்கொல்லிகளை உடைய உணவுகள்): ஆப்பிள்கள், செலெரி, ஸ்ட்ராபெரிக்கள், பீச், கீரை, இறக்குமதி செய்யப்பட்ட திராட்சைகள் மற்றும் நெக்டாரின்கள், ஸ்வீட் பெல் பெப்பர், உருளைக்கிழங்குகள், ப்ளூபெரிக்கள், லெட்யூஸ் மற்றும் கோலார்ட் கீரைகள்.

சுத்தமான பதினைந்து: (குறைவான பூச்சிக்கொல்லிகளை உடைய உணவுகள்): வெங்காயம், இனிப்பு சோளம், அன்னாசிப்பழம்,வெண்ணெய் பழம், அஸ்பாரகஸ், இனிப்பு பட்டாணி, மாம்பழங்கள், கத்திரிக்காய், பாகற்காய், கிவி, முட்டைக்கோஸ், தர்பூசணி, காளான்கள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு,திராட்சைப்பழம்.

மீன் மற்றும் மட்டியை சாப்பிடுவதற்கான பாதுகாப்பு குறிப்புகள்

1. சுறா, வாள் மீன் மற்றும் ராஜா கானாங்கெளுத்தி ஆகியவற்றில் அதிகப்படியான மெர்குரி நிலைகள் இருப்பதால் அவற்றை உண்ணக்கூடாது.

2. இறால், சற்று பதப்படுத்தின ட்யூனா, சால்மன், போலாக், கெளுத்தி மீன் போன்ற மெர்குரி குறைவாய் உள்ள மீன்களை உண்ணவும். வெள்ளை ட்யூனாவில் சற்று பதப்படுத்தின ட்யூனாவை விட அதிகளவு மெர்குரி உள்ளது.

நச்சுத்தன்மையை குறைக்க எளிய பழக்கங்கள்

1. லேபிள்களை வாசியுங்கள்: வாசிக்க முடியாவிட்டால், அதை வாங்காதீர்கள்.

2. இயற்கையானதை தேர்ந்தெடுங்கள்: அவை விலையுயர்ந்ததாய் இருந்தாலும், பூச்சிக்கொல்லிகளையும் மற்ற தீங்குவிளைவிக்கும் பொருட்களையும் உண்பதற்கு பதிலாக இவற்றை தேர்ந்தெடுங்கள். ஒருவரின் உணவு பயணிக்கும் தூரம் எவ்வளவு குறைவோ, அவ்வளவு குறைவான இரசாயனங்கள் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

3. இரசாயனங்களை தவிர்க்கவும்: அழகுசாதன பொருட்கள் மற்றும் தண்ணீர், நச்சுகளுக்கு பொதுவான முன்னோடிகளாகும். எனவே பதப்படுத்தின பொருட்கள், வாசனை திரவியங்கள், காற்றை தூய்மைப்படுத்துபவை மற்றும் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்துபவை இதில் அடங்கும். நீங்களே எலுமிச்சை சாறு மற்றும் வினிகரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் பொருட்களை உருவாக்கலாம். மேலும் தூய்மையான காற்றுக்கு அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

4. வடிகட்டிய நீரை குடிக்கவும்: BPA(பிஸ்பெனால் A) இல்லாத பாட்டில்களைப் பயன்படுத்தவும். ப்ளாஸ்டிக் பாட்டில்களை விட உலோக கொள்கலன்கள் மிகவும் பாதுகாப்பானது.

5. ப்ளாஸ்டிக் அல்லது குறிக்கப்படாத கொள்கலன்களை மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடாது: “மைக்ரோவேவிற்கு பாதுகாப்பானது” என குறிப்பிடப்பட்ட ப்ளாஸ்டிக்குகளை பயன்படுத்தவும்.

உடற்பயிற்சி

ஆரோக்கியமான அளவு உடற்பயிற்சி செய்வது ஆண் பெண் இருவருக்குமே பயனுள்ளது. வாரம் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறுதலை ஊக்குவிக்க, வாழ்க்கைமுறை மாற்றங்கள் நீண்ட காலம் செல்லலாம். கருத்தரிக்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், ஜங்க் உணவுகள், புகைபிடித்தல், மது ஆகியவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான எடையை பராமரித்து, சமநிலையான உணவுமுறையை கையாளுங்கள். இனிய பெற்றோர்த்துவத்தை அடையுங்கள்!

Write a Comment