Blog
Uncategorized

கருமுட்டைக் குழாய் அடைப்பு மற்றும் மலட்டுத்தன்மையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது

கருமுட்டைக் குழாய் அடைப்பு மற்றும் மலட்டுத்தன்மையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது

Author: Dr. Jigna Tamagond ,Consultant – Fertility Specialist

மலட்டுத்தன்மை திகைக்க வைக்கும் அளவு பல மக்களை பாதிக்கிறது. எல்லா பாலினரும் தெரிந்த மற்றும் தெரியாத காரணங்களால் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர். பெண் மலட்டுத்தன்மைக்கு, பொதுவான காரணங்களில் ஒன்று கருமுட்டைக் குழாய் அடைப்பு.

கருமுட்டைக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, உலகளவில் தோராயமாக 30% பெண்களில் மலட்டுத்தன்மைக்கு காரணமாய் இருக்கிறது.

கருப்பைகளையும் கர்ப்பப்பையையும் இணைக்கும் பாலமாக கருமுட்டைக் குழாய்கள் இருக்கின்றன.

கருத்தரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் வழியே கருமுட்டை கருப்பைகளில் இருந்து கர்ப்பப்பைக்கு செல்லும். விந்தணு, கர்ப்பப்பையில் இருந்து கருமுட்டைக் குழாய்கள் வழியே, கருமுட்டையோடு இணைய மேல்நோக்கிச் செல்லும். இதிலிருந்து கருமுட்டையின் சாத்தியமான கருவுறுதல் நடக்கும்.

கருவுற்ற கருமுட்டை இந்த பாலத்தின் வழியே சென்று, கர்ப்பப்பையில் பொருந்தி, கருத்தரிக்க உதவும்.

கருவுறுதலில் குழாய் அடைப்பின் பாதிப்பு:

குழாய் அடைப்பின் விளைவாக, கருமுட்டையில் கருவுறுதல் நடைபெறாது. அல்லது கருவுறுதல் நடைபெற்றாலும் (பகுதி குழாய் அடைப்பின் காரணமாக), கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு செல்வதை, கருமுட்டை குழாயில் உள்ள அடைப்பு தடுக்கும். இதனால் எக்டாபிக் கர்ப்பம் எனப்படும் இடம் மாறிய கர்ப்பம் ஏற்படும்.

இருந்தாலும், ஒரே ஒரு கருமுட்டைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், ஒரு கருமுட்டை கருவுற்று கருத்தரிக்க சாத்தியமுண்டு.

பல காரணங்கள் இருந்தாலும், குழாய் அடைப்புக்கான சில காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1.தொற்றுகளினால் ஏற்படும் வடு திசுக்கள் (இடுப்பு அழற்சி நோய் மற்றும் STI-கள் போன்றவை)

2.வயிற்று அறுவை சிகிச்சை ஏதேனும் செய்திருந்தால் – அப்பெண்டிக்ஸ் அகற்றம், எக்டாபிக் கர்ப்பம்

3.இடமகல் கருப்பை அகப்படலம்

4.கர்ப்பப்பையில் மற்றும் கருமுட்டைக் குழாய்களில் அழற்சி

5.பிறவி குறைபாடுகள், கர்ப்பப்பை மற்றும் கருமுட்டைக் குழாய்களின் அசாதாரணங்கள்

6.கர்ப்பப்பையில் நார்த்திசுக்கட்டிகள் அல்லது பாலிப்கள்

குழாய் அடைப்பின் அறிகுறிகள்:

கருமுட்டைக் குழாய் அடைப்பின் அறிகுறிகள், அடைப்பின் மூல காரணத்தைப் பொருத்து இருக்கும்.

உதாரணமாக, இடமகல் கருப்பை அகப்படலம் இருந்தால், அதிகமான மற்றும் வலிமிகுந்த மாதவிடாய் ஏற்படலாம்.

ஹைட்ரோசால்பின்க்ஸ் இருந்தால், வயிற்றின் ஒரு பக்கத்தில் லேசானது முதல் வழக்கமான வலி ஏற்படலாம்.

சில பெண்களுக்கு அவ்வபோதோ மாதவிடாயின்போதோ இடுப்பு பகுதியில் வலி ஏற்படலாம்.

ஆனாலும், கண்டறிப்பட்டால், இவற்றை கையாண்டு சிகிச்சை அளிக்க முடியும்.

நோய் கண்டறிதல்:

மூல காரணங்களின் அடிப்படையில் அறிகுறி காட்டுவதால், அடைபட்ட கருமுட்டை குழாய்களை அடையாளம் காண்பது சிரமம். வழக்கமாக, ஒருவர் கருத்தரிப்பதில் சிரமம் காண்பதற்கு முன் இந்த நிலைமை கண்டறியப்படுவதில்லை.

அடைபட்ட கருமுட்டை குழாய்களை கண்டறிய பயன்படுத்தப்படும் பொதுவான சோதனைகள்:

1.ஹிஸ்டெரோசால்பின்கோக்ராம் அல்லது HSG என்பது ஒரு எக்ஸ்ரே சோதனை. இதில் ஒரு பாதுகாப்பான நச்சில்லா சாயம் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு, கருமுட்டைக் குழாய்களிலுள்ள அடைப்புகள் கண்டுபிடிக்கப்படும்.

2.சோனோக்ராம் எனப்படும் சோனோஹிஸ்டெரோக்ராம் என்பது ஒரு அல்ட்ராசவுண்ட் சோதனை. இது கர்ப்பப்பைக்குள் பார்க்க உதவுகிறது. இது ஒலி அலைகளைக் கொண்டு ஒரு கணினி படத்தை உருவாக்கும்.

3.கீஹோல் அறுவைசிகிச்சை எனப்படும் லாப்ரோஸ்கோபியின் மூலம் உடலில் ஒரு சிறிய வெட்டை ஏற்படுத்தி, ஒரு சிறிய கேமரா உட்புகுத்தப்படும். இது வயிற்றின் உள்பகுதியைப் பார்க்க உதவும்.

அடைபட்ட கருமுட்டைக் குழாய்களுக்கான சிகிச்சைகள்:

சொல்லப்பட்டபடி, கருமுட்டைக் குழாய்கள் பகுதியாக அடைத்திருந்தாலோ, ஒரு குழாய் மட்டும் திறந்திருந்தாலோ ஒருவரால் கருத்தரிக்க முடியும். ஆனாலும், பகுதியாக அடைபட்டிருக்கும் குழாயில் எக்டாபிக் கர்ப்பத்துக்கான ஆபத்து அதிகம்.

இரு கருமுட்டை குழாய்களுமே முழுவதும் அடைபட்டிருந்தால், சிகிச்சையின்றி கருத்தரிக்கும் வாய்ப்பில்லை.

கருமுட்டைக் குழாய் அடைப்புக்கான சிகிச்சைகள் இவற்றின் அடிப்படையில் உண்டு:

1.அவரது வயது

2.குறைபாடு வகை / அதன் காரணம்

3.அடைப்பு இருக்கும் இடம்

இடுப்பு தொற்று கண்டறியப்பட்டால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படும்.

அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலைமைகளில், லேப்ரோஸ்கோபி பயன்படுத்தப்படும். இந்த முறையின் நோக்கம், அடைப்பை நீக்கி பெண்ணின் கருத்தரிப்பு வாய்ப்பை அதிகரிக்க கருமுட்டை குழாய்களைத் திறந்துவிடுவதாகும்.

அறுவை சிகிச்சைக்குப் பின் கருத்தரிப்பு வாய்ப்புகள் கீழ்கண்டவற்றை சார்ந்திருக்கும்:

1.வயது

2.துணையின் விந்தணு ஆரோக்கியம்

3.கருமுட்டைக் குழாயின் சேத அளவு

4.அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படாத சூழலிலோ, அறுவைசிகிச்சை பலன் தராத சூழலிலோ, இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (IVF) பரிந்துரைக்கப்படும்.

IVF-ல் கட்டுப்படுத்தப்பட்ட லேபாரேட்டரி சூழலில், கருமுட்டை விந்தணுவோடு கருத்தரிக்க வைக்கப்படும். கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு அனுப்பப்பட்டு, அதில் பொருந்தியபின் வெற்றிகரமான கருத்தரிப்பு நிகழும்.

சரியான நேரத்தில் சரியான செயல்பாட்டின் மூலம், அடைபட்ட கருமுட்டைக் குழாய் உங்களுக்கு இருந்தாலும்கூட, குழந்தைப் பெறும் கனவு நிறைவேறுவது சாத்தியம்.

எப்போதும் உங்கள் மருத்துவருடன், கிடைக்கக்கூடிய சிகிச்சை வாய்ப்புகளையும் அவற்றில் உங்களுக்கு பொருந்துபவைகளையும் பற்றி ஆலோசித்து, ஆரோக்கியமும் பாதுகாப்புமான கர்ப்பத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளைப் புரிந்துகொள்ளுங்கள்.

Write a Comment

BOOK A FREE CONSULTATION