Blog
Uncategorized

பெண்களில் மலட்டுத்தன்மைக்கான காரணங்களைக் கண்டறிதல்

பெண்களில் மலட்டுத்தன்மைக்கான காரணங்களைக் கண்டறிதல்

Author:  Dr. Sai Manasa Darla, Consultant, Fertility Specialist &  Laparoscopic Surgeon

பல மருத்துவ மற்றும் வாழ்க்கை முறை காரணங்களால், மலட்டுத்தன்மை என்பது பரவலாக காணப்படும் ஒரு உடல்நல பிரச்சனையாக உள்ளது. 30% மலட்டுத்தன்மை பெண் கருவுறுதல் காரணிகளால் ஏற்படுகின்றன. பெண்களின் மலட்டுத்தன்மை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது, அதை சரி செய்யவும், சிகிச்சை அளிக்கவும், அதன் மூலம் கருத்தரிப்புக்கு உதவவும் அவசியமாக உள்ளது.

பெண்களில் மலட்டுத்தன்மைக்கான பொதுவான காரணங்களை ஆராய்வோம்:

– அண்டவிடுப்பு கோளாறுகள்

– கருப்பை நோய்கள்

– குழாய் தொடர்பான மலட்டுத்தன்மை

அண்டவிடுப்பு கோளாறுகள்

அண்டவிடுப்பு கோளாறுகள், பெண்களின் மலட்டுத்தன்மைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

அண்டவிடுப்பு என்பது மாதவிடாய் சுழற்சியின் ஒரு கட்டம் ஆகும். இதில், ஒரு முதிர்ந்த கருமுட்டை கருப்பைகளால் வெளியிடப்படுகிறது, இது விந்தணுவுடன் கருத்தரித்தவுடன் கர்ப்பமாகிறது. அண்டவிடுப்பு செயல்பாட்டில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அண்டவிடுப்பு கோளாறுகள் ஏற்படும். மலட்டுத்தன்மை பிரச்சனைகளில் 25% அண்டவிடுப்பு கோளாறுகளால் ஏற்படுகின்றன.

இந்த உயிரியல் செயல்முறையில் ஈடுபடும் பல்வேறு காரணிகளின் விளைவாக அண்டவிடுப்பு கோளாறுகள் ஏற்பட்டு, பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணங்களுக்குப் பெரும் பங்களிக்கிறது.

சீரற்ற அண்டவிடுப்பு அல்லது அண்டவிடுப்பு இல்லாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில:

1. முதன்மை கருப்பை பற்றாக்குறை (POI):

இது முன்கூட்டிய கருப்பை செயலிழப்பு என்றும் குறிப்பிடப்படுகிறது. POI என்பது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கருமுட்டைகள் இருப்பது, அல்லது சில சமயங்களில் 40 வயதிற்குட்பட்ட பெண்களில் தன்னுடல் தாக்கம் அல்லது மரபணு பிரச்சனைகளின் காரணமாக கருப்பைகள் முன்கூட்டியே கருமுட்டைகளை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். இது பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணங்களில் ஒன்றாகும்.

2. சீரற்ற ஹார்மோன்கள்:

சீரற்ற அண்டவிடுப்பின் முக்கிய காரணிகளில் ஒன்று சீரற்ற ஹார்மோன்களாகும். நுண்ணறை-தூண்டுதல் ஹார்மோன் (FSH), லுடினைசிங் ஹார்மோன் (LH) மற்றும் புரோலேக்டின் போன்ற ஹார்மோன்களின் சிக்கலான மற்றும் நுட்பமான சமநிலை, அண்டவிடுப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தவொரு ஹார்மோன் ஒழுங்கின்மையும் அண்டவிடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி, கருத்தரிக்கும் வாய்ப்புகளை பாதிக்கிறது. சீரற்ற ஹார்மோன்களின் காரணமாக எழும் சில பிரச்சனைகள்:

– பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி (PCOS): PCOS என்பது பெண்களின் மலட்டுத்தன்மைக்கான பொதுவான மற்றும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பல சிறிய நீர்க்கட்டிகள் (திரவத்தால் நிரப்பப்பட்ட பைகள்) கருப்பையில் உருவாகின்றன, இது அண்டவிடுப்பில் சிக்கல்களை ஏற்படுத்தும். சீரற்ற மாதவிடாய் சுழற்சி, அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி, பெண் ஹார்மோன் ஒழுங்கின்மை, அண்டவிடுப்பு இல்லாமை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு, PCOS உடன் தொடர்புடையவை ஆகும்.

– அதிகமான புரோலாக்டின் அளவுகள் (ஹைப்பர்ப்ரோலாக்டினீமியா): சில சந்தர்ப்பங்களில், பிட்யூட்டரி சுரப்பியின் செயலிழப்பு புரோலாக்டின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதிகமான புரோலாக்டின் அளவுகள், FSH மற்றும் LH அளவுகளை எதிர்மறையாக பாதித்து, அண்டவிடுப்பு கோளாறுகள் மற்றும் கருவுறுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

– தைராய்டு செயலிழப்பு: தைராய்டு செயலிழப்பு போன்ற நாளமில்லாச் சுரப்பிக் கோளாறுகள், தைராய்டு சுரப்பியை செயலற்றதாகவோ மிக அதிகமாக செயல்படுவதாகவோ மாற்றும். இதனால் தைராய்டு ஹார்மோன் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். அண்டவிடுப்பின் மீதும், கருத்தரிப்பு வாய்ப்புகளின் மீதும், தைராய்டு செயலிழப்பு தீங்கான விளைவை ஏற்படுத்துகிறது.

3. குறைவான கருமுட்டை தரம் மற்றும் எண்ணிக்கை:

பெண்களின் கருவுறுதல், கருமுட்டையின் தரம் மற்றும் எண்ணிக்கையினால் தீர்மானிக்கப்படுகிறது. பெண்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கருமுட்டைகளுடன் பிறக்கிறார்கள். இந்த கருமுட்டைகளின் தரம் மற்றும் எண்ணிக்கை, வயது ஆக ஆக அதிவேகமாக குறைந்துவிடுகிறது. வயது முதிர்ச்சியடையும் போது, கருமுட்டைகள் மரபணு கோளாறுகளை உருவாக்குகின்றன, இது பிறவி குறைபாடுகளோ மீண்டும் மீண்டும் கருச்சிதைவுகளோ ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கும்.

 

 

கருப்பை நோய்கள்

கருப்பதித்தலுக்கும், கர்ப்பத்தை பிரசவம் வரை கொண்டு செல்வதற்கும் கருப்பை ஆரோக்கியம் முக்கியமானது. கருப்பை நோய்கள் கருப்பதித்தலைத் தடுப்பதன் மூலம் எம்ப்ரியோ வளர்ச்சியைத் தடுக்கின்றன. கருப்பதித்தல் நிகழ்ந்தாலும் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம்.

நார்த்திசுக்கட்டிகள், கருப்பை கட்டிகள், கருப்பை கோளாறுகள், எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் கருப்பையில் ஏற்படும் வடு போன்ற கருப்பை நோய்கள் அனைத்தும் கர்ப்ப வாய்ப்புகளைப் பாதிக்கின்றன.

1. நார்த்திசுக்கட்டிகள்:

நார்த்திசுக்கட்டிகள், கருப்பை தசையில் வளரக்கூடிய புற்றுநோய் அல்லாத கட்டிகளாகும். இவற்றின் அளவு மற்றும் வளரும் இடத்தைப் பொறுத்து, இவை கருவுற்ற கருமுட்டையின் கருப்பதித்தலை தடுக்கின்றன அல்லது கருமுட்டை அல்லது விந்தணுவின் இயக்கத்தைத் தடுக்கின்றன.

2. கருப்பை கோளாறுகள்:

பிறவி காரணங்களால் சில பெண்கள் அசாதாரணமான வடிவத்தில் உள்ள கருப்பையுடன் பிறக்கிறார்கள். இந்த வடிவ குறைபாடுகள், கருத்தரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தி, மீண்டும் மீண்டும் கருச்சிதைவுகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தை கொண்டுள்ளன.

3. எண்டோமெட்ரியோசிஸ்:

பெண்களின் மலட்டுத்தன்மைக்கான முக்கிய காரணங்களில் எண்டோமெட்ரியோசிஸ் ஒன்றாகும். சுமார் 30% பெண் மலட்டுத்தன்மைக்கு எண்டோமெட்ரியோசிஸ் காரணமாக உள்ளது. இதில், கருப்பைகள், கருப்பையின் பின்புறம், கருமுட்டைக் குழாய்கள் மற்றும் இடுப்புப் பகுதி போன்றவற்றில், உட்புற கருப்பை புறணி (எண்டோமெட்ரியம்) கர்ப்பப்பைக்கு வெளியே வளர்கிறது. தீவிரமான சூழல்களில், வடு திசுக்களை விட்டு கருப்பை வடு ஏற்படுகிறது. எண்டோமெட்ரியோசிஸின் அறிகுறிகளில், வலி மற்றும் சீரற்ற மாதவிடாய் சுழற்சி, கடுமையான இடுப்பு வலி, உடலுறவின் போது வலி போன்றவை அடங்கும்.

இது கருமுட்டைக் குழாய்களில் அடைப்பு, கருப்பதித்தல் தடைபடுதல் மற்றும் கருப்பை வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கருப்பதித்தல் தோல்விகள் மற்றும் மீண்டும் மீண்டும் கருச்சிதைவுகள் ஏற்படலாம்.

4. இடுப்பு அழற்சி நோய் (PID):

பெண்களின் மலட்டுத்தன்மைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று இடுப்பு அழற்சி நோய். பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் பாலியல் ரீதியாக பரவும் பாக்டீரியாக்களால் பாதிக்கப்படுகின்றன, அவை பிறப்புறுப்பிலிருந்து கர்ப்பப்பை, கருமுட்டைக் குழாய்கள் மற்றும் கருப்பைகள் வரை பரவுகின்றன. நாள்பட்ட PID, வடு திசுக்களை உருவாக்கி, வடிவமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. சிகிச்சை அளிக்கப்படாத நாள்பட்ட PID ஆனது, எக்டோபிக் கர்ப்பம் மற்றும் மலட்டுத்தன்மையின் அபாயத்துடன் தொடர்புடையதாகும்.

குழாய் தொடர்பான மலட்டுத்தன்மை

கருமுட்டைக் குழாயில் ஏற்படும் அடைப்பு, விந்தணுக்களை கருமுட்டையுடன் கருவுறவிடாமல் தடுக்கிறது. மேலும், கருத்தரித்தல் ஏற்பட்டாலும், கருமுட்டைக் குழாயில் உள்ள அடைப்பு காரணமாக எம்ப்ரியோவை கருப்பைக்கு கொண்டு செல்ல முடியாது, இதன் விளைவாக கலைக்கப்பட வேண்டிய எக்டோபிக் கர்ப்பம் உருவாகி விடும்.

கிளமிடியா மற்றும் கொனோரியா போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், முந்தைய அறுவை சிகிச்சைகளால் ஏற்படும் வடுக்கள், நாள்பட்ட PID, எண்டோமெட்ரியோசிஸ், நார்த்திசுக்கட்டிகள் அல்லது பாலிப்ஸ் போன்றவை, குழாய்களின் சேதத்தையும், குழாய் அடைப்பையும் ஏற்படுத்தி கருவுறுதலை பாதிக்கும்.

பெண்களின் கருவுறுதலை பாதிக்கும் ஆபத்து காரணிகள்

மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களைத் தவிர, கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை பாதிக்கும் சில ஆபத்து காரணிகள்:

– வயது: கருமுட்டைகளின் தரம் மற்றும் எண்ணிக்கையில் சரிவு ஏற்படுவதால், வயது ஆக ஆக பெண் கருவுறுதல் குறைகிறது.

– பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள்: முன்பு சொல்லியபடி, STIகள் பரவி, கருப்பை, கருப்பை வாய் மற்றும் கருமுட்டைக் குழாய்களை பாதித்து, பெண்களில் கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

– புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்: இது ஆண்களிலும் பெண்களிலும் மலட்டுத்தன்மைக்கான முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்றாகும். இது கருவுறுதலை பாதிப்பது மட்டுமின்றி, ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

– உடல் பருமன்: அதிக எடையுடன் இருப்பது கருவுறுதலை எதிர்மறையாக பாதித்து, கருத்தரிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

– குறைபாடுகள் மற்றும் பிற ஊட்டச்சத்து காரணிகள்: ஹார்மோன் உற்பத்தி மற்றும் இனப்பெருக்க அமைப்பின் சரியான செயல்பாட்டிற்கு முக்கியமாக உள்ள அத்தியாவசிய தேவைகளில் ஏற்படும் பற்றாக்குறையின் காரணமாக, வைட்டமின் குறைபாடுகள் மற்றும் சமநிலையற்ற உணவுமுறையை கையாள்வது, உங்கள் இனப்பெருக்க அமைப்பை கர்ப்பத்திற்கு தகுதியற்றதாக மாற்றும்.

– மன அழுத்தம்: மன அழுத்தம் அண்டவிடுப்பை பாதித்து, பாலியல் ஈடுபாடு குறைவதற்கு வழிவகுக்கிறது.

முடிவுரை:

மலட்டுத்தன்மை கண்டறியப்பட்ட தம்பதிகளுக்கு, மலட்டுத்தன்மைக்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால், அவர்கள் இந்த பிரச்சனையை சிறப்பாக கையாள உதவியாக இருக்கும். சரியான நோயறிதல், பயனுள்ள பிரத்தியேக சிகிச்சை திட்டத்தை உருவாக்க உதவுகிறது. இனப்பெருக்க மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு நன்றி, கருவுறுதல் பிரச்சனைகள் உள்ளதாக கண்டறியப்பட்ட பெண்கள், இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன், இன்ட்ராயூட்ரைன் இன்செமினேஷன், இன் விட்ரோ மெச்சூரேஷன் போன்ற பல கருவுறுதல் சிகிச்சைகளின் உதவியுடன் கர்ப்பமாகி தங்கள் தாய்மைக்கான கனவை அடைய முடியும். உங்கள் கருவுறுதல் பிரச்சினைகளைத் தீர்க்க, நிபுணத்துவம் வாய்ந்த கருவுறுதல் நிபுணருடன் கலந்தாலோசிக்கவும்.

Write a Comment

BOOK A FREE CONSULTATION